காளாத்தீஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம்: இன்று தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 01:02
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் சுவாமிக்கு ஞானம் பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. இக் கோயிலில் தனி சன்னதியில் தம்பதி சகிதமாய் எழுந்தருளியிருக்கும் ராகு கேது சுவாமிகளுக்கு, ஞாயிற்றுக் கிழமை தோறும் ராகு கால நேரத்தில் பூஜை நடைபெறும். இது காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் தேரோட்டம் நடத்த பிப். 10 ல் மண்டகப்படி துவங்கியது. சுவாமியும், அம்மனும் வித விதமான அலங்காரங்களில் வீதி உலா வந்தனர். நேற்று காலை கோகிலாபுராத்தில் பெண் வீட்டார் சார்பாக திருமணத்திற்கு வேண்டிய சீர்வரிசை பொருள்களுடன், அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். கோயிலில் காலை 10.30 மணிக்கு மேல் அம்மன் முழு அலங்காரத்தில் மணப்பெண் கோலத்தில் தங்கநகைகள் ஜொலிக்க எழுந்தருளினார். பட்டு வேட்டியில் மணமகன் கோலத்தில் காளாத்தீஸ்வரர் எழுந்தருளினார். மங்கலநாணை எடுத்து சிவாச்சாரியார் நீலகண்ட சாஸ்திரிகள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். திருக்கல்யாணத்தை ரசித்த பக்தர்கள் பரவசமடைந்தனர். சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன. குங்குமம், பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று மதியம்12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.