பதிவு செய்த நாள்
22
பிப்
2016
02:02
புதுச்சேரி: அன்னையின், 138 வது பிறந்தநாளையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அன்னையின் சமாதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர் துாவி வழிபட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்., 21ம் தேதி பிறந்தார் அன்னை. அவரது இயற்பெயர் மிர்ரா அல்லோன்சா. அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1914ல் புதுச்சேரி வந்தார். அவரால் அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் உருவாக்கப்பட்டன.
அவை, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக அமைந்து, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்து வருகின்றன. அரவிந்தர் ஆசிரம அன்னையின், 138வது பிறந்த நாளையொட்டி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வசித்த அறைகள், பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டன. அன்னையின் சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பல்வேறு மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னையின் சமாதியை மலர் துாவி வழிபட்டனர்.