கரூர் ஆயிரம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 02:02
கரூர்: பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான ஆளவந்தீஸ்வரர் கோவிலில், 180 ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் என்பது சோழர்களால் ஆட்சி செய்த இடம் என்பதற்கு இன்றும் சான்றாக விளங்கி வருகிறது. இப்பகுதியில், ஆயிரத்து, 500 ஆண்டுக்கு முன் ஆரணவள்ளி உடனமர் ஆளவந்தீஸ்வரர் கோவிலை கருங்கற்களால் கொண்டு சோழர்கள் கட்டினர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருக்கிறது. இருப்பினும், நாளடைவில் இக்கோவில் சுற்றுச்சுவர்கள் பெயர்ந்து விழுந்தும், பக்தர்கள் அதிகளவில் வராத நிலைக்கும் பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வேலைகளில் கடந்த ஓராண்டாகவே அதிகாரிகள் துணையுடன் ஈடுபட்டு வந்தனர். கோவில் புனரமைக்கும் பணி சமீபத்தில் முடிவடைந்தது. அதன்பின் கடந்த, 16ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிசேக விழா துவங்கியது. நாள்தோறும் பல்வேறு ஹோமங்கள் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடந்தது. கோவிலில் அமைந்துள்ள விநாயகர், ஆளவந்தீஸ்வரர் கோபுரத்திற்கு நேற்று முன்தினம் காலை காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கலசங்களுடன் ஊர்வலமாக வந்த சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிசேகம் செய்து வைத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், ஆங்காங்கே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.