பதிவு செய்த நாள்
23
பிப்
2016
02:02
திருப்பூர்: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மகா மகம் தீர்த்தவாரி மற்றும் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி, முயங்குபூண்முலை வல்லியம்மை உடனமர் திருமுருகநாத சுவாமி கோவிலில், மகா மகம் குளம் உள்ளது. 69 ஆண்டுகளுக்கு பின், மகா மகம் குளம் புதுப்பிக்கப்பட்டது. மகா மக நாளில், இக்குளத்தில் புனித நீராடினால், 21 தலைமுறைகளுக்கான பாவ விமோசனம் கிடைக்கும் என்றும்; கங்கை, யமுனை உள்ளிட்ட புனித நதிகள், இக்குளத்தில் கலப்பதாகவும், ஐதீகம் உள்ளது.
இந்நிலையில், 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகா மகம் தீர்த்தவாரி, நேற்று நடைபெற்றது. காலை, 4:30க்கு சிறப்பு பூஜை நடந்தது. ஒன்பது நதிகளின் புனித நீர், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கலக்கப்பட்டன. அம்பாளுடன், சந்திரசேகர் குளத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, துறவிகள், சாதுக்கள், சைவ சமய பெரியோர், குளத்தில் நீராடினர். பின், பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். ஆண், பெண் பக்தர்களுக்கு தனி வரிசை தடுப்பு அமைக்கப்பட்டு, குளத்துக்குள் வரிசையாக இறங்கி குளித்தனர். நேற்று அதிகாலையில் இருந்து, பிற்பகல் வரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.