பதிவு செய்த நாள்
27
பிப்
2016
01:02
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா, 21ஆண்டுகளுக்குப்பின் நடக்கவுள்ளதால், யாகசாலைக்கு பிப்.,26 ‘பாலக்கால்’ இடப்பட்டது.
கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சூலக்கல் மாரியம்மன் கோவில் முக்கியமானது. 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மக்கள் அம்மனை நேர்கொண்டு வழிபட்டு, மாவிளக்கு எடுத்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவில் திருவிழாவும், தேர்வடம் பிடித்தலும் நடக்கவில்லை. நுாறாண்டு பழமையான தேர் சமீபத்தில், 27 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சூலக்கல் அம்மனை தரிசிக்க, கோவை மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும், பொதுமக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனுக்கு திருவிழா நடத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், சமய பெரியோர் கூடி, கும்பாபிஷேக தேதியை தீர்மானித்தனர். இதன்படி, வரும் மார்ச், 18ம் தேதி, சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், 21 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோவில் சுற்றுச்சுவர் மற்றும் கோவில் வளாக தரைதள சீரமைப்பு பணிகள் வேகமாக நடக்கிறது. மகா கும்பாபிஷேக பெருவிழா, ஜமீனுக்கு உட்பட்ட, 8 கிராமங்களிலும், ஜமீனுக்கு உட்படாத, 10 கிராமங்கள் என, 18 கிராமங்கள், திருவிழா நாட்களில் விழாக்கோலம் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.