மனிதர்கள் தாங்கள் தண்டிக்கப்படுகிற போது கடவுளைக் கடிந்து கொள்கிறார்கள். கடவுள் காரணம் இல்லாமல் தண்டனை கொடுப்பதில்லை. பின்னால் வரக்கூடியவற்றை அறிந்தே அவ்வாறு செய்கிறார். ஒரு வாலிபர் வண்டி ஓட்டிச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும் இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்களைப் பொருத்திக் கொண்டார். அவர் ஒரு முறை ஆப்ரிக்காவுக்கு சென்றார். அங்குள்ள சில காட்டுவாசிகள் அவரைக் கடத்திச்சென்றனர். அவர்களின் தலைவன், இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனது மாமிசத்தை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள், என உத்தரவிட்டான். தலைவனின் உத்தரவைக் கேட்ட காட்டு மிராண்டிகள் வாலிபனை நெருங்கினர். அவனது கால்களை வெட்ட முயன்ற போது, உள்ளே ஏதோ கடினமான பொருள் இருப்பதை பார்த்தனர். அங்கு காலுக்கு பதிலாக கட்டை இருந்ததைப் பார்த்து பயந்து போனார்கள்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்களது தலைவனிடம் வாலிபனின் காலிற்குள் ஏதோ கட்டை இருப்பதாக கூறினர். தலைவனும் ஏதும் புரியாமல் வாலிபன் அருகில் வந்து பார்த்தான். அப்போது அவனுக்கும் பயம் உண்டானது. தாங்கள் கடத்தி வந்திருக்கும் வாலிபன் சாதாரண மனிதப்பிறவி அல்ல என்றும், ஏதோ தெய்வப்பிறவி என்றும் நினைத்தனர். தலைவன் காட்டுமிராண்டிகளிடம் இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஏதோ கடவுள் போல இருக்கிறார். ஆகவே, இவரை வெட்டி விடாதீர்கள், என்றதோடு, அவனையே குருவாகவும் ஏற்றுக் கொண்டான். அதன்பின் அந்த வாலிபர் அவர்களிடமிருந்து தப்பி வந்தார். நாம் பலவீனமாக நினைப்பவைகூட, நமக்கு கர்த்தரின் கிருபையால் நன்மையையே தருகின்றன. கடவுள் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை.