பதிவு செய்த நாள்
07
மார்
2016
11:03
தேவலோக அழகனான மன்மதன், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நல்ல காரியத்திற்காக தவம் செய்து கொண்டிருந்த சிவனை எழுப்ப முயற்சித்தான். தன் மலர் அம்பை அவர் மீது எய்தான். விழித்த சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து, அவனை எரித்து சாம்பலாக்கி விட்டார். இவர் அடிக்கடி கோபப்பட்டால் உலகம் தாங்காது என்பதால், பிரம்மா சிவனின் கோபத்தை அனலாக திரட்டி கடலுக்குள் புகுத்தி விட்டார். அந்த கோப அனல் குழந்தையாக மாறியது. பிரம்மா அந்த குழந்தைக்கு ஜலந்திரன் என பெயரிட்டார். அவன் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் மிகவும் தொந்தரவு கொடுத்தான். இதை தேவர்கள் திருமாலிடம் தெரிவித்தனர்.ஜலந்திரனின் சக்திக்கு காரணமே அவனது மனைவி தான். அவளது பதிபக்தியால் தான் அவன் தப்பி வந்தான். ஜலந்திரனை அழிக்க வேண்டுமானால் அவனது மனைவி பிருந்தையின் பதி விரதத்தை அழிக்கவேண்டும் என திருமால் உணர்ந்தார். (பிருந்தை என்றால் துளசி என்று பொருள்). எனவே திருமாலே ஜலந்திரன் போல உருவெடுத்து பிருந்தையிடம் சென்றார். வந்திருப்பது திருமால் என்பதையும், தனது பதி விரதத்தை சோதிக்க அவர் வந்திருப்பதையும் அறிந்த பிருந்தை தீயில் புகுந்து உயிரை விட்டாள். பிருந்தை இறந்தவுடன் ஜலந்திரன் தன் வலிமையை இழந்து விட்டான்.பிருந்தையை வலுக்கட்டாயமாக கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், வருந்திய திருமால் சாம்பலாக மாறி பிருந்தையின் சாம்பலுடன் கலந்து விட்டார். திருமால் இல்லாத வைகுண்டம் இருண்டது. திருமகளான லட்சுமிதேவி வருந்தினாள்.
இதனை அறிந்த பார்வதி, லட்சுமியிடம், “பூமியில் உள்ள பாரிஜாத வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் புற்றிடங்கொண்டார் என்னும் சிவலிங்க மூர்த்தியை வில்வ இலை துாவி வழிபட்டால் உன் கணவனை அடையலாம், என்றாள். திருமகளும் அவ்வாறே செய்ய திருமால் சுயரூபம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமகளுக்கும் திருமாலுக்கும் காட்சி தந்தார். “சிவனை வில்வ இலை துாவி வணங்கினால் டாடா பிர்லா போல வாழலாம், என்று வாரியார் சுவாமி தன் சொற்பொழிவின் போது சொல்வார்.சிவன் சில விதைகளை திருமாலிடம் கொடுத்து பிருந்தையின் சாம்பலில் துாவ சொன்னார். அதன்படியே செய்ய அதிலிருந்து துளசி தோன்றியது. திருமால் அந்த துளசியை எடுத்து சிவனை அர்ச்சித்து விட்டு மீதியை மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். சிவனுக்கு வில்வமும், திருமாலுக்கு துளசியும் மாலையான கதை இதுதான்.
தண்ணீர் இல்லாமலே குளிக்கலாம்: மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வரையே என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவருக்குரிய மரண நாள் வந்ததும், எமன் அவரது உயிரைக் கவர்ந்து செல்ல வந்தான். மார்க்கண்டேயர் உடல் நிறைய திருநீறு பூசி, திருக்கடையூரிலுள்ள சிவனை சரணடைந்து லிங்கத்தை கட்டியணைத்துக் கொண்டார். ஆனாலும் எமன் விடவில்லை. சன்னிதிக்குள் வரும் முன்பே, எமனைக் காலால் உதைத்து தள்ளினார் சிவன். இதன்பின் எமன் தன் துாதர்களிடம், “திருநீறு பூசிய பக்தர்களை கண்டால் வணங்கிச் செல்ல வேண்டும்,” என உத்தரவிட்டான். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்று பெயருண்டு. இதற்கு பாதுகாப்பது என்று பொருள். சம்பந்தர் மதுரை சோமசுந்தரர் மீது பாடிய மந்திரமாவது நீறு திருநீற்றின் மகிமையை விளக்குகிறது. திருநீற்றை சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் மூன்றாலும் எடுக்க வேண்டும். கீழே சிந்தாமல் சிவாயநம என்று சொல்லி நெற்றியில் அணிய வேண்டும். இதற்கு பஸ்ம ஸ்நானம் அல்லதுதிருநீற்றுக்குளியல் என்று பெயர். இரவில் சுத்தமான மனநிலையுடன் படுத்து, அதிகாலையில் எழுந்து பல்துலக்கி விட்டு திருநீறு அணிந்தால் தினமும் இருமுறை குளித்ததற்கு சமம்.
சிவராத்திரி விரதமுறை: சிவராத்திரியன்று காலையில் நீராடி சிவசிந்தனையுடன் விரதத்தை தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பது நல்லது. நோயாளிகளுக்கு விதிவிலக்கு உண்டு. இரவில் கண்விழித்து, நான்கு ஜாமமும் கோவிலில் சிவலிங்கத்துக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம, நமசிவாய ஆகியவற்றை ஜபிக்க வேண்டும். சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்த பிறகு எஞ்சுவதை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.