பதிவு செய்த நாள்
08
மார்
2016
11:03
புதுடில்லி: குஜராத் வழியாக, 10 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சிவராத்திரியை முன்னிட்டு, நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இருந்து, லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஸ் - இ - முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 10 பயங்கரவாதிகள், குஜராத் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக, உளவுத் துறையினர் எச்சரித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு, குஜராத், டில்லி, கோல்கட்டா, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் அவர்கள் நாசவேலைகளில் ஈடுபடக் கூடும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்துக்கு தேசிய பாதுகாப்புப் படை எனப்படும், என்.எஸ்.ஜி., வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு, சோமநாதர் ஆலயம், அக் ஷர்தாம் ஆலயங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இதேபோல, தலைநகர் டில்லியில் உள்ள முக்கிய கோவில்களிலும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை பகுதிகள், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்ட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ராஜ்நாத் சிங் ஆலோசனை:பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனும் நேற்று, தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள கோவில்களிலும், மக்கள் கூடும் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளிடம் ராஜ்நாத் சிங் கேட்டு அறிந்தார்.