பதிவு செய்த நாள்
08
மார்
2016
11:03
பழநி: பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.பழநி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம்தான். கோயில் சார்பில் பிரதான பிரசாதமாக அபிஷேக பஞ்சாமிர்தம் அரைக்கிலோ டப்பா ரூ.35, டின் ரூ. 40 என்ற விலையில் ஆண்டுக்கு ரூ.25 கோடி வரை விற்பனையாகிறது. நீண்ட நாட்களாக கெடாமல் இருப்பதால், பக்தர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். மூலப்பொருட்கள் வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் ஆகிய 5 பொருட்கள் அடங்கிய கலவை தான் பஞ்சாமிர்தம். கோயில் நிர்வாகம் மட்டுமின்றி பழநியில் தனியார் பலரும் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதிலுள்ள பேரீச்சம் பழம்,தேன், வாழைப்பழம் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற காரணத்தால் பஞ்சாமிர்த்தை
தங்களின் அன்றாட சாப்பாட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி, பிரட் ஆகியவற்றில் ஜாம் போல தடவி உண்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பழநி பஞ்சாமிர்தத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் புவிசார் குறியீடு பெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அதன் சிறப்புகள், விற்பனை விபரம் போன்றவைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை இந்துசமய அறநிலை யத்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறப்படும். விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது,” என்றார்.