பதிவு செய்த நாள்
09
மார்
2016
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுக்கு, ஒரு முறை மட்டுமே நடக்கும் லிங்கோத்பவருக்கான சிறப்பு பூஜையில், தாழம்பூ சாற்றி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருமாலுக்கும், பிரம்மாவுக்கும், நான் என்ற அகந்தையை நீக்கி, லிங்கோத்பவராக உருவமெடுத்து, ஜோதி பிழம்பாக காட்சி அளித்த நாள் மஹா சிவராத்திரி ஆகும். இதனால், மஹா சிவராத்திரியன்று அண்ணாமலையார் கோவிலில், இரவில், நான்கு கால பூஜை நடக்கும். அதன்படி நேற்று முன்தினம் இரவு, 8.30 மணிக்கு, அருணாசலேஸ்வரருக்கு, முதல் கால பூஜையும், இரவு, 11 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், அதிகாலை, 2 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், அதிகாலை, 4 மணிக்கு, நான்காம் கால பூஜையும் நடந்தது. அப்போது, கோவில் மூலவர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு, ஆண்டுக்கு, ஒரு முறை மட்டுமே தாழம்பூவை அணிவித்து நடத்தும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.