பதிவு செய்த நாள்
09
மார்
2016
11:03
கடலுார்: மகா சிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறப்பு பூஜை நடந்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க அங்கி அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சந்திரசேகரர், அருந்தவநாயகிக்கு அபிஷேகமும், மாலை 5:00 மணிக்கு விநாயகர், துர்கை, நந்திகேஸ்வரர், யுகமுனீஸ்வரருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், பாடலீஸ்வர், பெரியநாயகிக்கு சாயரட்ச பூஜையும் நடந்தது. இரவு 8, 11, நள்ளிரவு 2, அதிகாலை 4:00 என நான்கு கால பூஜையும், நள்ளிரவு 12:00 மணிக்கு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் சன்னதியில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து அதிகார நந்தி வாகனத்தில் அதி உன்னத கோபுர தரிசனத்தை தொடர்ந்து ராஜவீதியுலா நடந்தது. சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இரவு முழுவதும் பூஜைகள் நடந்தது.காலை கோபுர தரிசனமும் சுவாமி வீதிஉலாவும் நடந்தது. அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இரவு முழுவதும் 1008 விளக்குகளை எரியவிட்டு வழிபட்டனர். வெள்ளபாக்கம் சிவலோகநாதர் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் இரவு முழுவதும் பூஜை நடந்தது. விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பஞ்சகலசம் வைத்து சிறப்பு யாக பூஜை, முதல் கால பூஜை, இரவு 9:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நான்கு கால யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஏகநாயகர் கோவிலில் இரவு 7:00 மணியளவில் கலசம், 108 சங்குகள் வைத்து சிறப்பு யாகம், 9:00 மணியளவில் முதல் கால அபிஷேகம் துவங்கி, நான்கு கால யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் புனிதநீர் கலசம் வைத்து, நான்குகால யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். புதுச்சத்திரம்: தீர்த்தனகிரி கருந்தடங்கன்னி உடனுறை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிவக்கெழுந்தீஸ்வரருக்கு பால், தயிர், பழம், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அய்யம்பேட்டை நாகலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 10:00 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து 12.00 மணிக்கு லிங்கம் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.