பதிவு செய்த நாள்
09
மார்
2016
11:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா, கடந்த 7ம் தேதி, மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவாக நேற்று மயானக் கொள்ளை நடந்தது. காலை 10:40 மணிக்கு, கோவிலில் இருந்து, சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன், மயானம் புறப்பாடு நடந்தது. சிம்ம வாகனத்தில் அம்மன் வந்தபோது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இறைத்தனர். காலை 11:00 மணிக்கு, மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளியதும், அங்கு பக்தர்கள் குவித்து வைத்திருந்த உணவை, கோவில் பூசாரிகள் கொள்ளை விட்டனர். அப்போது, அங்காளம்மன் பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் சிலர் உயிர் கோழிகளை வாயில் கடித்து பலி கொடுத்தனர். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் நாகபூஷிணி, பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சேகர் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்களை இயக்கப்பட்டது.