பதிவு செய்த நாள்
15
மார்
2016
02:03
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே இலுப்பக்குடியில் 300 ஆண்டு பழமையான வாலகுருநாதசுவாமி, அங்காள ஈஸ்வரி கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. இந்த கோயில் அர்த்த மண்டபம்,மகாமண்டபத்தை அடுத்து சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மூலவரான வாலகுருநாத சுவாமி,அருகே அங்காள ஈஸ்வரி அம்மன்அமர்ந்துள்ளனர். இந்த சன்னதி வெளிபிரகாரத்தில் இருந்து 80 அடி தூரத்தில் உள்ளது. உத்திராயான காலமான மார்ச் 8 முதல் மார்ச் 20 வரையும், தட்சணையான காலமான செப்., 17 முதல் செப்., 29 வரையும் உதயமாகும் சூரிய ஒளி மூலவர், அம்மன் மீது விழுகிறது.
நேற்று காலை 6:25 மணிக்கு கிராமமக்கள் ஒன்றுகூடி தீபாராதனை ஏந்தி சூரியனை வரவேற்றனர். சூரிய கதிர் 6:50 மணி வரை 25 நிமிடங்கள் மூலவர், அம்மன் மீது விழுந்தது. அதன்பின் முழுமையாக மறைந்தது. இதனை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர் போன்ற வெளி மாவட்ட பக்தர்களும் கண்டு தரிசித்தனர். அதன் பின் அபிஷேகம் நடந்தது. கோயில் திருப்பணி தலைவர் கோவிந்தசாமி, செயலர் இருளாண்டி, பொருளாளர் ஜீவானந்தம் கூறியதாவது: இந்த கோயிலை 41 கிராமங்களை சேர்ந்தோர் வழிபடுகின்றனர். தோஷ நிவர்த்தி, மகப்பேறு, கல்வித் தடை நீக்கம் போன்றவற்றிக்கு பிரசித்தி பெற்றது. 250 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் இலுப்பை மரங்கள், பனைமரங்களுக்கு இடையே குடிசையில் இருந்தது. 1993ல் தான் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்ட இந்த கோயில் மூலவர் மீது சூரிய தரிசனம் கிடைப்பது சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிய வந்தது, என்றனர்.