புதுச்சேரி: புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் உள்ள ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் 12வது மாத மிருகசீருஷ நட்சத்திர பூஜை நேற்று நடந்தது. அம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் மிருகசீருஷ நட்சத்திர பூஜை நடந்து வருகிறது. நேற்று 12வது மாத நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை அம்மனுக்கு மகா சக்தி யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை 48 மூலிகைகளால் அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு குங்குமம் அர்ச்சனை செய்து பலிபீடத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.