பதிவு செய்த நாள்
17
மார்
2016
11:03
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை 18ம் தேதி நடப்பதை முன்னிட்டு இந்த சிறப்பு பகுதி வெளியிடப்படுகிறது.
மணிமுக்தா நதிக்கரையில் வசித்து வந்த காத்யாயன முனிவரின் மகள் காத்யாயனி. அழகுக்கு இலக்கணமான அப் பெண், திருமண பருவம் அடைந்தவுடன், தக்க கணவரைப் பெறுவதற்காக மணிமுக்தா நதிக்கரையில் கடும் தவம் புரிந்தாள். அப்போது, துாய படிகம் போன்ற மேனியும், எழில் கொழிக்கும் அங்கங்களும் மன்மதனையொத்த அழகும் கொண்ட கல்யாண குணசாகரமாக வராகப் பெருமான், அவருக்கு காட்சி தந்தார். காத்யாயனி, பெருமாளிடம் தன் தோழியை அனுப்பி, தன் ஆசிரமத்திற்கு வந்து விருந்துண்ண அழைத்தாள். பெருமாள் அதற்கு மறுத்ததால், மிகுந்த கவலையில் கண்ணீர் பெருகினாள். பெருமாள், காத்யாயனியின் பக்தியை சோதிக்க எண்ணி, பிரம்மனை அனுப்பி பெருமானைப் பற்றி பழித்து பேச சொன்னதால் கோபமடைந்த காத்யாயனி அவ்விடத்தில் இருந்து வெளியேறினாள். காத்யாயனியின் பக்தியால் உள்ளம் பூரித்த பெருமாள், காத்யாயனர் வேண்டுகோளுக்கிணங்க, காத்யாயனியை மணந்து கொண்டார். காத்யாயனி, அம்புஜவல்லி என்ற பெயரில், வளையமாதேவியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீமுஷ்ணத்தில் பிரதான மூர்த்தியின் பிரகாரத்திற்கு அடுத்துள்ள பிரகாரத்தில், தென்மேற்கு மூலையில் அம்புஜவல்லி தாயார் சன்னதி உள்ளது. கோவில் பிரகாரத்தின் வட புறத்திலுள்ள கோபுரத்தின் பக்கத்தில் அம்புஜவல்லி தாயாரின் தோழிகளுக்கு குழந்தையம்மன் சன்னதி உள்ளது. பெருமாள் கோவிலில் அம்மன் சன்னதி இடம் பெற்றுள்ளது, தனி சிறப்பாக கருதப்படுகிறது.