பதிவு செய்த நாள்
18
மார்
2016
11:03
அவிநாசி: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், அவிநாசி வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கர் ஆகியோர் கூறியதாவது: இடமிருந்து வலமாக எழுதப்படும் முறையை, முதன்முறையாக உலகக்கு நல்கிய பிராமி எழுத்து, தமிழ் வடிவம் கொண்டவை. மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 30 இடங்களில், பிராமி கல்வெட்டுகள் உள்ளன.இக்கல்வெட்டுகள் பெரும்பாலும், மலை சார்ந்த குகைக்குள் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டம், அரச்சலுார் நாகமலையில், கல்வெட்டு உள்ள பகுதியை சுற்றிலும், கருவேல முள்மரங்கள் நிறைந்துள்ளன. எளிதில் செல்ல முடியாதவாறு மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.ஏறத்தாழ, 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகவும் பழமையான கல்வெட்டு குறித்த ஒரு தகவல் பலகையைக் கூட, தொல்லியல் துறை வைக்காதது வேதனை. இதைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.