பதிவு செய்த நாள்
19
மார்
2016
12:03
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மார்ச் 18, மாலை, சுவாமிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் 18, காலை விமரிசையாக நடந்தது. மாலை, 6:00க்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சோமஸ்கந்தர் ரூபத்தில் சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.திருக்கல்யாண உற்சவம், வேத மந்திரங்கள் முழங்க ஹோமம், மாலை மாற்றுதல், சீர் வரிசை, தேன் பருப்பு, லட்டு, ரவாலட்டு, அதிரசம், தேன்குழல், முத்துச்சாரை, அப்பம், மைசூர்பா உள்ளிட்ட பலகாரங்கள், வஸ்திரங்கள் உள்ளிட்டவை சீர் வரிசை தட்டுகளில் வைத்து, மேள தாளம் முழங்க, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, அலங்கார தீபம், நாக தீபம், ரிஷப தீபம், மயூர தீபம், நட்சத்திர தீபம், சப்த காயத்திரி தீபம் என, பல்வேறு வடிவ தீபங்களில், சுவாமிக்கு தீபாராதனை நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகனும், அன்ன பட்சி வாகனத்தில், அம்பாளும், ரிஷப வாகனத்தில், ஸ்ரீவிஸ்வேஸ்வரரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரமும் எழுந்தருளி, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.