பதிவு செய்த நாள்
19
மார்
2016
12:03
பொன்னேரி: ஆண்டார்குப்பத்தில், பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிேஷக விழா விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், 50 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையடுத்து, மார்ச்18ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, காலை, 9:40 மணிக்கு ராஜ கோபுரம், வேம்படி விநாயகர், பாதாள கங்கையம்மன், பாலசுப்ரமணிய சுவாமி சன்னிதி ஆகியவற்றின் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், பொன்னேரி, ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், திருவேங்கிடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பொன்னேரி போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடம்பவனம் கோவில்: கடம்பத்துார், கடம்பவன முருகன் கோவிலில், மார்ச்18ல், மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, கடம்பத்துாரில் உள்ளது கடம்பவன முருகன் கோவில். இந்த கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட நவக்கிரக கோவில், ஐயப்பன் சிலை மற்றும் கடம்பவன முருகன் உற்சவருக்கு, மார்ச்18ல், மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, மார்ச்18, முன்தினம் காலை, கணபதி பூஜை, பூர்ணாஹூதி, புதிய பிம்பங்கள் கண் திறத்தல் நடந்தது. தொடர்ந்து மாலை, 5:30 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையும், பிரவேச பலியும் நடந்தது.
மார்ச்18, காலை, 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை, 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத கடம்பவன முருகன். உற்சவர், நவக்கிரகங்கள், ஐயப்பனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கடம்பத்துரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாள கலந்து கொண்டனர்.
ராமபிரான் கோவில்: ராமபிரான், செல்வ விநாயகர் கோவிலில் மார்ச்18ல், நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த எல்லப்பநாயுடு பேட்டை கிராமத்தில், ராமபிரான், செல்வ விநாயகர் மற்றும் நவக்கிரக மூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது.
இதற்காக, கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமம் நடைபெற்றது. மார்ச்18, காலை, 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்டுள்ள, ராமபிரான் மற்றும் செல்வ விநாயகர் கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் திருவீதியுலாவும் நடைபெற்றது.