பதிவு செய்த நாள்
21
மார்
2016
11:03
பழநி: பழநி பங்குனி உத்திரவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான நாளை இரவு திருக்கல்யாணமும், மார்ச் 23ல் கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது.பழநி பங்குனி உத்திரவிழா திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 26வரை நடக்கிறது. பக்தர்கள் பலர் தீர்த்தக்குடங்களுடன் பழநியில் குவிகின்றனர். இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் திருஆவினன்குடி கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் நாளை இரவு 7.30மணிக்குமேல் 8.30 மணிக்குள் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவுலா நடக்கிறது. நாளை மறுநாள் பங்குனிஉத்திரத்தன்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்படும். அன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நான்கு கிரிவீதிகளில் நடக்கிறது. முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், ஆட்டுகிடா, காமதேனு, யானை, தங்கமயில் வாகனங்களில், சன்னதிவீதி, கிரிவீதியில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்கள் வசதிக்காக கிரிவீதியில் போலீஸ் உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயில், பாதவிநாயகர் கோயில் அருகே குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பங்குனிஉத்திரம் அன்று இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.