விராலிமலை முருகன் கோவிலில் நடந்த திருப்பணியில், கருப்பமுத்து என்ற முருக பக்தர் ஈடுபட்டார். ஒருநாள் பலத்த காற்றுடன் மழை பெய்யவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவரருகே முதியவர் ஒருவர் நடுங்கியபடி வந்தார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அத்துடன் கருப்பமுத்து ஆற்றைக் கடக்கவும் உதவினார். பின் அவரைக் காணவில்லை. கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்த போது, ஒரு சுருட்டு முருகன் முன் இருப்பது கண்டு அதிர்ந்தார். கருப்பமுத்து நடந்ததைக் கூற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யம் படைக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வர வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டார் முருகன்.