காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், பங்குனி உத்திர விழா கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 14ம் தேதி கொடியேற்றம், இரவு வெள்ளி கேடகத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. விழா நாட்களில் நான்கு ரத வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் இரவு வையாபுரியில் தெப்ப உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 5.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 5.15 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு ரத வீதிகள் வழியாக மாலை 6.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இன்று காலை 10 மணிக்கு உத்திரம் தீர்த்தவிழா, இரவு 8 மணிக்கு சுவாமி மயிலாடும் பாறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.