பதிவு செய்த நாள்
23
மார்
2016
11:03
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர விழா தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் 10 நாள் பங்குனி உத்திர தேரோட்ட விழா மார்ச் 14 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, முருகன் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர், கின், கினி மணி ஓசையுடன் ஆடி, அசைந்தபடி, வந்தது. பெரிய தேரில் சோமாஸ்கந்தர், பிரியாவிடை அம்மனுடனும், சிறிய தேரில் முருகன், வள்ளி, தெய்வானையுடனும், மற்றொரு தேரில் பரிவார மூர்த்திகளான சண்டிகேஸ்வரர், விநாயகர் மற்றும் அறம் வளர்த்தநாயகியுடனும் உலா வந்தனர். தேர் மேலரதவீதி, தெற்குரதவீதி வழியாக நிலையை சேர்ந்தது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர். அமைச்சர் பன்னீர் செல்வம், அவரது தம்பியான நகராட்சி தலைவர் ராஜா கலந்து கொண்டனர்.