காளையார்கோவில்: உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. உருவாட்டி பெரியநாயகி அம்மன்கோவில் பங்குனி விழா,மார்ச் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். நேற்று காலை 5மணிக்கு தேரில் எழுந்தருளினார். 6 மணிக்கு ஆடு பலியிடப்பட்டு , தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் பறவைக்காவடி, மயில்காவடி,பூக்குழி இறங்கி, அக்னிச்சட்டி எடுத்தும்,கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகம் மற்றும் உருவாட்டி கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.