கடலுார்: வண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. கடலுார், புதுவண்டிப்பாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 19ம் தேதி பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் முன்னிலையில் சிவசுப்ரமணி சுவாமி வள்ளி–தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இரவு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று பங்குனி உத்திரத்தைத் தொடர்ந்து காலை கோபுர தரிசனமும், தொடர்ந்து 108 சங்கு பூஜை மற்றும் யாகசாலை பூஜை, கலசாபிஷேகம் நடக்கிறது.