விருதுநகர் கோயில் யானை இறப்பு: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2016 12:03
விருதுநகர்: விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் யானை சுலோசனா உடல் நலம் குன்றி நேற்று இறந்தது. இதற்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.விருதுநகர் இந்து நாடார் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாலசுப்பிரமணியன் சுவாமி கோயிலுக்கு, திருச்சியில் இருந்து 1998ல் கொண்டு வரப்பட்டது இந்த யானை. 57 வயதை நெருங்கிய இந்த யானை கடந்த ஓரு ஆண்டாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. நேற்று காலை 6.50 மணிக்கு திடீரென கீழே விழுந்து இறந்தது. இதையடுத்து கால்நடைத்துறை இணை இயக்குனர் சுகுமார், மாவட்ட வனக்காப்பாளர் (பொறுப்பு) ராஜ்குமார் உட்பட அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர். பட்டு, மாலை சாத்தி மரியாதை: யானையை கோயில் வளாகத்திலிருந்து கிரேன் மூலம் தேசபந்து மைதானத்தில் நிறுத்தப்பட்ட லாரிக்கு எடுத்து வரப்பட்டு, பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பக்தர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பின் லாரியுடன் மீண்டும் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு, கோயில் சார்பில் பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அங்கிருந்து புது பஸ் ஸ்டாண்ட் அருகே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கால்நடைத்துறை இணை இயக்குனர் சுகுமார் கூறுகையில், கடந்த ஓராண்டாக யானைக்கு பார்வை சரிவர தெரியாமல் இருந்தது. தொடர்ந்து சிறுநீரகம், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக நன்றாக இருந்த நிலையில் நேற்று காலை உடல் நிலை மோசமாகி இறந்தது, என்றார். தந்தங்களை எடுக்காத வனத்துறை: வனத்துறை சார்பில் யானைகள் இறந்தால் அவற்றிலிருந்து தந்தங்களை எடுப்பது வழக்கம். இறந்த கோயில் யானையின் தந்தம் தேய்ந்த நிலையில் இருந்ததால் அவற்றை எடுக்காமல் விட்டனர். நேற்று காலை வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பாலாஜி வெங்கடாஜலபதி கோயில் சன்னதிகள் திறந்த சிறிது நேரத்தில் யானை இறந்ததால் கோயில் நடை சாத்தப்பட்டது. யானை அடக்கத்திற்கு பின் மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது.