பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
ஊட்டி:ஊட்டி அருகே அவலாஞ்சி தெப்பக்கோடு மந்துவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில், பாரம்பரிய முறைப்படி கூரை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரியில் வசிக்கும் தோடர் இன மக்களின் திருமணம், கோவில் நிகழ்ச்சிகள், விழாக்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவர்களின் வாழ்வில் எருமைகளுக்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது. இவர்களின் கோவில் கூரை, வனங்களில் இயற்கையாக கிடைக்கும், பிரம்பு, மூங்கில், அவுல் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு வேயப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி அருகே அவலாஞ்சி பகுதியில் தெப்பக்கோடு மந்துவில் உள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில், கூரையை மாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தோடரின மக்கள், தங்களின் பாரம்பரிய உடையணிந்து, வனங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட, குறிப்பிட்ட பொருட்களை கொண்டு, கூரையை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, கூரை வேயும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியின கூட்டமைப்பு தலைவர் நோர்தே குட்டன் கூறுகையில்,“ எங்களின் கோவில் முழுவதையும் இயற்கையாக கிடைக்கும் புற்களை கொண்டே கட்டுகிறோம். காலங்கள் மாறினாலும், எங்களின் பாராம்பரிய வழக்கங்களை மாற்றாமல் உள்ளோம்,” என்றார்.