கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த 39 வருடங்களாக குறிஞ்சியாண்டவருக்கு காவடி விழா நடைபெற்று வருகின்றது. பலர் குறிஞ்சியாண்டவருக்கு விரதம் மேற்கொண்டு காவடி எடுத்து நேர்த்திகடன் செய்து வருகின்றனர்.
பங்குனி உத்திர விழாவினை முன்னிட்டு கொடைக்கானல் இந்து மகாஜன சங்கம் மற்றும் இந்து முன்னனி சார்பில் காவடி விழா நடைபெற்றது. நேற்று மதியம் 2 மணியளவில் குறத்தி சோலை பகுதியிலிருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டு நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயிலை அடைந்தது. இன்று காலை 10 மணியளவில் கோயிலில் இருந்து காவடி புறப்பட்டது. அட்டுவம்பட்டி, அப்சர்வேட்டரி, ஆனந்தகிரி, பாம்பார்புரம், மற்றும் பல பகுதிகளிலிருந்து வந்த காவடிகள் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ஒன்றுகூடி அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி 1, 2 தெருக்கள் எம்.எம். தெரு வழியாக குறிஞ்சியாண்டவர் கோயிலை சென்றடைந்தது.