சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு: ஏப்.10ல் மீண்டும் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2016 11:03
சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா நேற்று இரவு கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.இங்கு கடந்த 14-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் உத்திர திருவிழா தொடங்கியது. தினமும் உற்சவபலி, ஸ்ரீபூதபலி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. எல்லா நாட்களிலும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். 22-ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்கு சரங்குத்திக்கு எழுந்தருளினார். நள்ளிரவில் நடந்த பள்ளிவேட்டைக்கு பின்னர் சன்னிதானம் திரும்பிய சுவாமி, கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை, உற்சவ விக்ரகத்தில் இருந்து ஸ்ரீகோயிலுக்கு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அபிஷேகமும், நெய்யபிஷேகமும் நடந்தது. காலை ஏழு மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் சுவாமி பம்பைஆராட்டுக்கு யானை மீது எழுந்தருளினார். பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி சங்கரன்நம்பூதிரி ஆகியோர் அபிஷேகங்கள் நடத்தி பம்பையில் விக்ரகத்துடன் மூழ்கி எழுந்தனர். பின்னர் பம்பை கணபதி கோயில் முன்பு தரிசனம் நடைபெற்றது. மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அடுத்து சித்திரை விஷூ பூஜைகளுக்காக ஏப்.,10-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படுகிறது.