பதிவு செய்த நாள்
28
மார்
2016
12:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. மூன்று கோவில்களிலும், கம்பம் நடப்பட்டு, தினமும் பக்தர்கள் தண்ணீர், பால் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மக்கள் மட்டுமில்லாது, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், தனித்தனியாக தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர்.
விடுமுறை நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். குறிப்பாக வளையக்கார வீதி, நாட்டராயன் கோவில் வீதி, வைரபாளையம், அசோகபுரம், பகுதி பக்தர்கள், 20 அடி வேல், முதுகு அலகு, நாக்கு அலகு, காவடி அலகு, திருவாச்சி அலகு குத்தி ஆக்ரோசத்துடன் ஆடியபடி வந்தனர். இதனால் கோவில் முன்பு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அலகு குத்தி வந்த பக்தர்களை, சுவாமி தரிசனத்துக்காக ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டனர். நாளை அதிகாலை, வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், 30ம் தேதி, சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும், பொங்கல் வைபவமும் நடக்கிறது.