தியாகதுருகம்:தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி புற்றுமாரியம்மன் திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து, நேர்த்தி கடன் செலுத்தினர். தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி புற்றுமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 21ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும், சக்தி கரகம், வீதியுலா நடந்தது. மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவு நடந்தது. 9ம் நாள் திருவிழாவான நேற்று, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுந்து ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். பெண் பக்தர்கள் உடலில் அலகு குத்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.