ராமேஸ்வரம் கோயிலில் இளைப்பாற வசதியின்றி பக்தர்கள்... அவதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2016 11:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாற பந்தல் இல்லாததால் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கவேண்டிய பரிதாபம் உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகள், வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடிவிட்டு சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் அதிகம் கூடும் கிழக்கு ரதவீதி, சன்னதி தெருவில் பந்தல், நிழல்குடை இல்லாததால் இளைப்பாற வழியின்றி சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கவேண்டிய பரிதாபம் உள்ளது. முதியவர்கள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். அம்மன் சன்னதி முன்புள்ள கருங்கல் மண்டபத்தை திறந்து பக்தர்கள் இளைப்பாற கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கோயில் அலுவலகம் அருகில் உள்ள ஓய்வு இல்லத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட அம்மன் முகப்பு கருங்கல் மண்டபத்தை, தற்போதைய கோடை வெயிலில் பாதிக்கும் பக்தர்களுக்காக திறக்கவும், ஓய்வு இல்லத்தில் பக்தர்களை தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.