சேலம்: சேலம் எல்லைபிடாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று காலை வரை சத்தாபரண சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் கடந்த மார்ச், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன், பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் சிறப்பு அபி ஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்து வந்தது. மார்ச், 31ம் தேதி தீமிதி விழா நடந்தது. பண்டிகையின் நிறைவு நிகழ்ச்சியான சத்தாபரணம் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி, நேற்று காலை வரை நடந்தது. இதில், அம்மன் சிலை பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் திருவீதி உலா நடத்தப்பட்டது. வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டது. நேற்று மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. மஞ்சள் நீரை ஊற்றி, பக்தர்கள் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.