பதிவு செய்த நாள்
07
ஏப்
2016
11:04
திருப்பதி: திருமலையில், 300 ரூபாய் விரைவு தரிசன பக்தர்கள், 2 கி.மீ., துாரம் நடந்து சென்று, தரிசன வரிசையை அடைந்தனர். வயதானோர் சிரமப்படுவதால், இந்த துாரத்தை குறைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த தேவஸ்தானம், வைகுண்டம் காத்திருப்பு அறை அருகே, 2 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய, புதிய தரிசன பாதையை உருவாக்கி உள்ளது. திருமலையில், ஆழ்வார் டேங்க் காட்டேஜ் என்ற, ஏடிசி கார் நிறுத்தம் வழியாக சென்றால், உடமைகள் பாதுகாக்கும் இடம் உள்ளது. இங்கு பக்தர்கள், தங்கள் உடமைகளை வைத்து விட்டு, மேற்கு திசையில் செல்ல வேண்டும். விரைவு தரிசன டிக்கெட் பரிசீலனை கவுன்டர் வழியாக, புதிய தரிசன பாதையை அடையலாம்; இதனால், 1.5 கி.மீ., துாரம் குறைகிறது. சோதனை ரீதியாக, புதிய பாதையில், நேற்று, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். புதிய பாதை, நாளை, யுகாதி பண்டிகை அன்று, முறைப்படி பயன்பாட்டிற்கு வரும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.