பதிவு செய்த நாள்
07
ஏப்
2016
12:04
கொண்டலாம்பட்டி: பங்குனி உத்திர விழாவையொட்டி, நேற்று பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில்களில், பங்குனி உத்திரபெருவிழா கடந்த மார்ச், 23ல் துவங்கியது. நேற்று காலை முனியப்பன் கோவிலில், பொங்கல் வைத்து பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். மாலை, 5.30 மணியளவில், காளியம்மனுக்கு அக்னி குண்டத்தில் இறங்கி, பூ மிதிக்க, தகிக்கும்நெருப்பு குண்டம் தயார் செய்து பூஜை நடந்தது. அதன்பின், பூங்கரகத்தை சுமந்து, வீதியுலா வந்த பக்தர், அக்னி குண்டத்தில் இறங்கி, காளியம்மனை வழிபட்டார். அவரை தொடர்ந்து, விரதம் இருந்த பக்தர்கள், வரிசையாக சென்று குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். குழந்தைகளை ஏந்தியபடி, பக்தர்கள் பலர் குண்டம் இறங்கியது, மெய்சிலிர்க்க வைத்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன், காளியம்மனை வழிபட்டனர். விரதம் இருந்த பக்தர்கள் மீது, மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை ஊற்றி, அவர்களது பாதங்களில் விழுந்து, வழி நெடுகிலும், பெண்கள் வணங்கினர்.