காசிவிசுவநாதர் கோயில் தெப்பக்குளம் சுத்தப்படுத்த வேண்டும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2011 11:08
தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயில் தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி காசிவிசுவநாதர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னிமாரம்மன் கோவில் தெருவில் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தெப்ப உற்சவ திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா வரும் செப்.6ம் தேதி நடக்கிறது. இதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. பழைய பஸ்ஸ்டாண்ட் வடபுறம் உள்ள சீவலப்பேரி குளத்திலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரவேண்டும். தற்போது குளத்தில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதாள கால்வாயில் விடப்படுகிறது. தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் முழுவதும் சுத்தம் இல்லாமல் இருக்கிறது. தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அதிகளவில் கிடக்கிறது. தண்ணீரில் பெரும்பான்மையான கழிவு பொருட்கள் மிதந்து துர்நாற்றத்தை உருவாக்கியுள்ளது. திரளான பொதுமக்கள் தினமும் தெப்பக்குளத்தில் குளிப்பது வழக்கம். சிலர் துணிகளை துவைப்பதும் உண்டு. தெப்பக்குளம் சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதால் அங்கு பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க தெப்ப உற்சவ திருவிழாவிற்கு முன்னரே தெப்பக்குளத்தில் உள்ள கழிவு பொருட்களை அகற்றி சுத்தம் செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.