பதிவு செய்த நாள்
11
ஏப்
2016
01:04
நாமகிரிப்பேட்டை: மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா நேற்று நடந்தது. நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆத்தூர் சாலையில், மெட்டாலா கணவாய் அமைந்துள்ளது.
இங்கு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குடைவரை கோவில் வகையை சேர்ந்த மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவில் முன்பு நின்று சுவாமியை தரிசித்து செல்வர். இக்கோவிலில், தீ மிதிவிழா ஆண்டுதோறும் பங்குனி, கடைசி ஞாயிற்றுக்கிழமை நடக்கும். இந்த ஆண்டு தீமிதி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, நாமகிரிப்பேட்டையில் ஆஞ்சநேயர் பந்தசேர்வை திருவீதி உலா நடந்தது. நேற்று காலை நாமகிரிப்பேட்டையில் சிறப்பு பூஜையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. மதியம், 1 மணிக்கு கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமிக்கு சக்தி அழைத்தலும் சுவாமி நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6 மணிக்கு அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ராசிபுரம் அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து விட்டு சென்றார். இதேபோல், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கம்பம் நடுதலுடன் துவங்கியது. முக்கிய நாளான தேர்திருவிழா, 13ம் தேதி (புதன் கிழமை) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.