பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
11:04
நாசிக்: மஹாராஷ்டிராவில் உள்ள, திரியம்பகேஷ்வர் கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த, ஆண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மட்டும் நிர்வாகம் நீக்கியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது; அங்கு, அஹமத் நகர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சனி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறைக்குள் நுழைய அனுமதி கோரி, பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வழக்கில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில் கருவறைக்குள்ளும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மராட்டிய புத்தாண்டை ஒட்டி, சனி கோவில் கருவறைக்குள் செல்ல பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மற்ற கோவில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என, பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி எழுப்பி வருகின்றனர். இந்த சர்ச்சையால், நாசிக் அருகேயுள்ள திரியம்பகேஷ்வர் கோவிலில், ஆண்களும் கருவறைக்குள் நுழைய, கோவில் நிர்வாகம் தடை விதித்தது; இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கோவில் பாரம்பரிய நடைமுறையை நிர்வாகம் மாற்றுவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆண்கள் கருவறைக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக, நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெண்கள் கருவறைக்குள் நுழைய, நுாற்றாண்டு காலம் தடை இருப்பதால், அதை விலக்கிக் கொள்ள முடியாது என, கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது.
ஜோதிர்லிங்க ஸ்தலம்: நாசிக்கில் உள்ள திரியம்பகேஷ்வர் சிவாலயம், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால், இந்த கோவிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.