பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
10:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.அப்போது, உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் எதிரே வந்து எழுந்தருளினார். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திருத்தணி முருகன் திருவடி சபையின் சார்பில் பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம் ஆடினர்.இன்று, காலை 9:30 மணிக்கு, வெள்ளி சூர்ய பிரபையும், இரவு 7:00 மணிக்கு, பூத வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். வரும், 21ம் தேதி வரை, தினமும் காலை, இரவு நேரங்களில் முருக பெருமான், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவர். இம்மாதம், 19ம் தேதி குதிரை வாகனம் மற்றும் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.