பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
10:04
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். பின், பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோவில் முன் கொட்டியவுடன், திருநீறாக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து, சீராப்பள்ளியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் சாட்டையடி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும், தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் வேண்டுதல் இல்லை என்றாலும் சாட்டையடி வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.