பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
கூடலுார்: சேதமடைந்து வரும் மங்கலதேவி கண்ணகி கோயிலை சீரமைக்க வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கேரள உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியியல் துறை வல்லுனர் குழுவினர், நேற்று கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக- கேரள எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இது அமைந்துள்ள பகுதி யாருக்கு சொந்தம் என இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. மதுரையை எரித்த கண்ணகி சுருளி அருவி, கூடலுார் வழியாக நடந்து வந்து வின்னேற்றிப்பாறை என அழைக்கப்படும் வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் வந்து தங்கியிருந்த போது, கோவலன் வந்து வானுலகிற்கு அழைத்துச் சென்றார் என்பது வரலாறு. இவ்வாறு தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலுக்கு பல ஆண்டுகளாக தமிழக பக்தர்கள் பளியன்குடி வழியாக சென்று வழிபட்டு வந்தனர்.
1975ல் தி.மு.க., ஆட்சியில் பளியன்குடி வழியாக கோயிலுக்கு ரோடு அமைக்கும் பணி துவங்கியது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் தடைபட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட கேரள வனத்துறை, குமுளியில் இருந்து 14 கி.மீ., துாரமுள்ள கண்ணகி கோயிலுக்கு ஜீப் பாதை அமைத்தது. கேரள வனப்பகுதி வழியாக கோயிலுக்கு பாதை இருந்ததால், கோயில் கேரளாவுக்கு சொந்தம் என கேரள தரப்பில் கூறப்பட்டது. மேலும், புலிகள் சரணாலயப்பகுதி என்பதை காரணம் காட்டி கோயிலை சீரமைக்க கேரள வனத்துறை அனுமதி மறுத்தது.
வழக்கு: இந்நிலையில், கம்பம் கூடலுாரில் உள்ள மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர், கண்ணகி கோயில் தமிழகத்திற்கு சொந்தம், சேதமடைந்து வரும் கோயிலை சீரமைக்க வேண்டும் என, கேரள உயர்நீதி மன்றத்தில் கடந்த 2014ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்தாண்டு இந்தியத் தொல்லியியல் துறை இயக்குனர் பிரேம்நாத், கேரள அட்டார்னி ஜெனரல் விஜயராகவன், மங்கலதேவி கண்ணகிகோயிலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். கோயில் எந்த வனப்பகுதியில் உள்ளது என்பதையும் சர்வே செய்தனர். இதற்கான அறிக்கையை கேரள உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆய்வு: அடுத்த கட்ட விசாரணையில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு, கேரள உயர்நீதி மன்றம் ஏப். 5ல் உத்தரவிட்டது. அதனடிப்படையில் திருவனந்தபுரம் தொல்லியியல் துறை மறுசீரமைப்பு பொறியாளர் சதீஷ், வேதியியல் நிபுணர் ஜெயக்குமார், உதவி களப்பணியாளர்கள் கிருஷ்ணராஜ், ரகு ஆகியோர் கொண்ட வல்லுனர் குழு நேற்று கோயிலில் ஆய்வு மேற்கொண்டது. கோயில் சீரமைப்பு, கல்வெட்டு தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஏற்கனவே பல முறை நடத்திய ஆய்வு அறிக்கைகளையும், தற்போதய ஆய்வு அறிக்கையையும் சேர்த்து ஏப்.,24ல் இக்குழு கேரள உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. அதன்பின், கோயிலை சீரமைப்பது குறித்த தீர்ப்பு வெளியாகும்.