பதிவு செய்த நாள்
31
ஆக
2011
11:08
திருநெல்வேலி : நெல்லையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 111 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி, இளைஞர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலம், விசர்ஜனம் நடக்கும். இந்த ஆண்டு நெல்லை மாநகரப்பகுதியில் 47 விநாயகர் சிலைகளும், மாவட்டப்பகுதியில் 340 விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடவுள்ளனர். பெரும்பாலான சிலைகள் விநாயகர் சதுர்த்தி நாளில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோயில் சன்னிதி திடலில் விவேகானந்த மகாசபை சார்பில் நேற்று 11 அடி உயர விநாயகர் சிலை, 110 சிறிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மதியம் கூட்டுப்பிரார்த்தனை, மாலையில் உலக நன்மை வேண்டி மகாயாகம், சிறப்புபூஜை நடந்தது. இன்று விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை, கோமாதா வழிபாடு, சொற்பொழிவு நடக்கிறது. செப்டம்பர் 1ம்தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், அகவல் பாராயணம், அன்னதானம், வீடுகளில் பூஜை செய்த சிலைகளுடன் 111 சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. முக்கிய தெருக்கள் வழியே செல்லும் ஊர்வலம் கொக்கிரக்குளம் ஆற்றில் நிறைவு பெறுகிறது. ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர். இதுதவிர ஊத்துமலை பகுதியில் 3 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.