குழந்தைகளை விளையாட்டாக நீ அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா? என்று கேட்பதுண்டு. விநாயகர் அம்மா பிள்ளை தான் என்றாலும், அப்பா சிவபெருமானுக்கும் அவருக்கும் பலவித அம்சங்களில் ஒற்றுமை உண்டு. அதனால், விநாயகரை வழிபட்டவர்கள் சிவனருளும் பெற்று மகிழ்வர். சிவனும் விநாயகரும் இருவருமே செக்கச் சிவந்த மேனிவண்ணம் கொண்டவர்கள். சிவனுக்கு ஐந்து முகங்கள் இருப்பது போல ஹேரம்பகணபதிக்கு ஐந்து முகங்கள் உண்டு. மூன்றாம் பிறை நிலவை, ஈசனைப் போல விநாயகரும் தலையில் சூடிக் கொண்டிருக்கிறார். பாம்பினை இருவருமே உடலில் ஆபரணங்களாக அணிந்து இருப்பர். தந்தையைப் போலவே, விநாயகரும் ஐந்தொழில்களைச் செய்யும் வல்லமை கொண்டவர். நடராஜராக ஈசனும் நாட்டியமாடுகிறார். நர்த்தனகணபதியாக விநாயகரும் ஆடல்புரிகிறார். சிவனுக்கு இடபாகத்தில் உமையவள் இருப்பது போல, வல்லபையை விநாயகர் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறார்.