பதிவு செய்த நாள்
02
செப்
2011
10:09
ஈரோடு : பக்தர்கள் நலன், சுற்றுச்சூழல், புராதனம், தொன்மை கருதி கோவில் வளாகப் பகுதியை, தூய்மைப் பகுதியாக அரசு அறிவித்துள்ளது, என, அரசு செயலர் ராஜாராம் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசு செயலர் ராஜாராம் நேற்று ஈரோடு வந்தார். கொடுமுடியில் உள்ள புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோவிலை ஆய்வு செய்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பக்தர்கள் நலன், சுற்றுச்சூழல், புராதனம், தொன்மை கருதி, கோவில் வளாகப்பகுதியை தூய்மைப் பகுதியாக அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து தூய்மைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவில் மதில் சுவரில், பறவைகளின் எச்சம் விழுவதால், செடி, கொடிகள் வளர்ந்து வருகின்றன. அது, உழவாரப் பணி மூலம் அகற்றப்படும். கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக துணியிலான பைகள், மூங்கில் கூடைகள் போன்ற, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். புனிதம் மற்றும் ஆன்மிக தன்மை கொண்ட இடமாக கோவில் விளங்க வேண்டும் என்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபம் அருகே, தனியார் பங்களிப்புடன், பூங்காவாக பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆறுகள் கூடும் பவானி நகரை, தொன்மையான நகராக அறிவிக்க சுற்றுலாத் துறை மூலம், நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், கோவில் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணுவது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அறிக்கை கிடைத்தவுடன், சீர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் பகுதியில் டாஸ்மாக் கடைகள் நடத்த தடை விதிக்கப்படும். இது தொடர்பாக அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். இவ்வாறு ராஜாராம் கூறினார்.