பதிவு செய்த நாள்
02
செப்
2011
10:09
பெரியகுளம் : பெரியகுளம், ஆண்டிபட்டியில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. பெரியகுளத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு, பா.ஜ., முன்னாள் அமைப்பு செயலாளர் மகாதேவன் தலைமை வகித்தார்.கனரா வங்கி மேலாளர் சீனிவாசன் துவக்கிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமானுஜம் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜாபாண்டி, வர்த்தக அணித்தலைவர் கோபிக்கண்ணன், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பார்த்திபன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் 11 சிலைகள் சென்றன. வடகரை, தென்கரை உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வராகநதியில் கரைக்கப்பட்டன.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் விநாயக சதுர்த்தி விழா நடந்தது. ஆண்டிபட்டி அக்ரஹாரம் சித்தி விநாயகர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் 16 வகை சிறப்பு பூஜைகள் நடந்தன. சக்கம்பட்டி நன்மை தருவார் கோயில், மேலப்பிள்ளையார் கோயில், கல்கோயில் ராஜவிநாயகர், காசி விநாயகர், ஆண்டிபட்டி பால விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வீடுகளில் விநாயகர் சிலைகள் செய்து வழிபட்டனர். கொண்டமநாயக்கன்பட்டி, ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, சீத்தாராம்தாஸ்நகர், மறவபட்டி, மணியாரம்பட்டி, கதிர்நரசிங்கபுரம், தெப்பம்பட்டி, குள்ளப்புரம், கோயில்புரம், ரங்கசமுத்திரம், நாச்சியார்புரம், எஸ்.எஸ்.புரம், ஜம்புலிபுத்தூர், முத்துகிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், ராஜகோபாலன்பட்டி, மல்லையாபுரம், மேக்கிளார்பட்டி, போடிதாசன்பட்டி, மாயாண்டிபட்டி, பிச்சம்பட்டி, ஒக்கரைப்பட்டி, வெங்கிடாசலபுரம், டி.வி.ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களில் 37 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் கண்ணாயிரம், உமையராஜன், மாவட்ட அமைப்பாளர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
கூடலூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி ,கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் உள்ள சுந்தர விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விநாயகரை பழ வகைகளால் அலங்காரம் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அபிஷேகப்பால், பிரசாதம் வழங்கப்பட்டது. கூடலூர், பால சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிறப்புபூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது.