காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் உள்ள, ஆதிகேசவப் பெருமாள் கூரத்தாழ்வான் தேவஸ்தானத்தில், நூதன த்வஜஸ்தம்பம்(கொடி மரம்) மஹாஸம்ப்ரோக்ஷணம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கூரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் கொடி மரம் இல்லை. சமீபத்தில் நன்கொடையாளர்கள் உதவியுடன், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், தேக்கு மரத்தில், 30 அடி நீளமுள்ள கொடிமரம் உருவாக்கப்பட்டது. கம்பத்தை சுற்றி பித்தளை கவசம் பதிக்கப்பட்டது. பணி முடிந்து, நேற்று மஹாஸம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.ஸம்ப்ரோக்ஷணத்தையொட்டி, கடந்த 29ம் தேதியிலிருந்து சிறப்பு ஹோமங்கள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மஹாஸம்ப்ரோக்ஷணம் வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.