பதிவு செய்த நாள்
02
செப்
2011
11:09
நகரி:நகரி, கரியமாணிக்கம் பெருமாள் கோவிலுக்கு, திருப்பதி தேவஸ்தானம், 56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.சித்தூர் மாவட்டம், நகரி டவுனில், நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கரியமாணிக்கம் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், பழுதடைந்ததை அடுத்து, கோவில் இடிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கரியமாணிக்கம் சுவாமி மூலஸ்தானமும் அகற்றப்பட்டு, கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. மூலவர் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில், ஐதீக முறைப்படி, பூமி பூஜை செய்யப்பட்டு, புதிய கோவில் கட்டும் பணி, 6 மாதங்களாக நடந்து வருகிறது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும் இக்கோவிலின் புதிய கட்டட மேம்பாட்டுப் பணிகளை, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி, கே.சீனிவாசராஜூ பார்வையிட்டார். கட்டடப் பணிகள் துரிதமாக நடைபெற நிதி ஒதுக்கீடு செய்யும்படி நகரியைச் சேர்ந்த கோவில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், அப்போது தேவஸ்தான அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் கோவில் பணிகள் துரிதமாக நடைபெற 56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, இக்கோவில் அதிகாரி பிரசாத் தெரிவித்தார்.