பதிவு செய்த நாள்
02
செப்
2011
11:09
நாகர்கோவில் : நிறம் மாறும் விநாயகர் கோவிலுக்கு, சமய வகுப்பு மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்று வழிபட்டனர். வினை தீர்க்கும் விநாயகரின் பிறந்த நாளான சதுர்த்தி தின நாளில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தக்கலை அருகே கேரளபுரத்தில், நிறம் மாறும் அதிசய விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் ஆறு மாதம் வெள்ளையாகவும், ஆறு மாதம் கறுப்பாகவும் காட்சி தருகிறார். விநாயகர் நிறம் மாறுவதை பொறுத்து, இந்த கோவிலில் உள்ள அரச மரமும், கிணற்று நீரும் நிறம் மாறுவதாக நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்ட சமயவகுப்பு மாணவியர், தக்கலை பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கொல்லன்விளை வேம்படி விநாயகரை தரிசித்து, பின், கேரளபுரம் வந்து அதிசய விநாயகரை தரிசித்தனர். இந்த ஊர்வலத்தில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சமய வகுப்பு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதிசய விநாயகர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சகோதர இயக்கம் செய்திருந்தது.