தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் வடக்கு வீதிக்கு அருகளில் உள்ளது. இங்கே, பகுளாமுகி எனும் திருநாமத்தில் காட்சி தந்தருள்கிறாள் மகிஷாசுரமர்த்தினி. கிழக்குப் பார்த்த நிலையில் எட்டுத் திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, மகிஷனைக் காலடியில் போட்டு வதம் செய்யும் கோலத்தில் திருக்காட்சி தருகிறாள் காளிதேவி. கம்பீரமான ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம், நாயக்கர் மற்றும் மராட்டியர்களின் சிற்ப ஆர்வத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தில் சிவதுர்கை, விஷ்ணு துர்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, மார்த்தாண்ட பைரவர் சன்னதிகள் உள்ளன. செவ்வாய், வெள்ளியில் ராகுகால வேளையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் மனதில் குறைகள் இன்றி நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்.