பதிவு செய்த நாள்
05
மே
2016
12:05
அவிநாசி: பவானிசாகர் அணையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், 61 ஆண்டுகள் பழமையான சாய்பாபா சிலை உள்ளது தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 1948ல் துவங்கி, 1955ல் கட்டி முடிக்கப்பட்டது. தடங்கல் இன்றி கட்டுமானம் நடக்க, அணையின் மேல்பகுதியில், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலில், சாய்பாபாவுக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, இப்போது தெரியவந்துள்ளது. அவிநாசி ஷீரடி சாய்பாபா மந்திர் பொறுப்பாளர் சாய் ரவி கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் பகவான் ஸ்ரீசாய்பாபாவுக்கு, 1955ல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவே, உலகிலேயே பாபாவுக்கு வைக்கப்பட்ட முதல் சிலை. இருப்பினும், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலுள்ள விநாயகர் கோவிலில் உள்ள சாய்பாபா சிலை, ஷீரடி சிலைக்கும் முந்தையதாக இருக்கலாம் என நம்புகிறோம். அணை கட்ட துவங்கிய, 1948ம் ஆண்டு, பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டன. இதையறிந்த, கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர், உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, விநாயகர் மற்றும் சாய்பாபா சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார். அதன்பின், எவ்வித பிரச்னையுமின்றி, அணை கட்டுமான பணி நடந்து, 1955ல் நிறைவுற்றது. பவானிசாகர் அணையில், சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்திருப்பதை அறிந்த நாங்கள், அணைக்கு சென்று பாபாவுக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு நடத்தினோம். இனி, வாரந்தோறும் வியாழக் கிழமை, வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, சாய் ரவி கூறினார். அணை கட்டுமான பணி குறித்த கல்வெட்டு அல்லது பதிவேடுகளை ஆய்வு செய்தால், பாபா சிலை எந்தாண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது என்ற முழுமையான விவரங்கள் தெரியவரும், என, சாய் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.