காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரத்தில் குமர கோட்டம் என்று அழைக்கப்படும் சுப்ரமணிய சுவாமி கோவில், வைகாசி பிரம்மோற்சவத்திற்கு, நேற்று காலை, 8:40 மணியளவில் கொடியேற்றப்பட்டது. காலையில், பவளக் கால் சப்பரத்தில் சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக, வரும் 18ம் தேதி, தேர் திருவிழா நடைபெறுகிறது. 22ம் தேதி இரவு, வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். தினமும் காலை, இரவு சுவாமி ஊர்வலம் நடைபெறும். வரும் 25ம் தேதியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.